திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
சென்னை – திருவள்ளூர் இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராம்- ல் எல்.சி., 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவு பாதையில், 45 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு, சென்னையில் இருந்து மிலிட்டரி சைடிங்குக்கு நாள் தோறும் 20-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று, சென்னை, ஆவடிக்கு திரும்புகின்றன.
ஆகவே, இந்த கடவுப்பாதை, முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை மூடப்பட்டு வந்ததால், கடவுப் பாதையின் இருபுறமும் திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, சென்னை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று வந்தன.
இதனால், நெடுஞ்சாலையின், இருபுறமும் அரை கி.மீ., தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
எனவே, பட்டாபிராம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. தமிழக நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே சார்பில், ரூ.78.31 கோடி மதிப்பில் 640 மீட்டர் நீளத்தில் , பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதனிடையே வருவாய்த் துறையினர் 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்திய நிலையில்,சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சென்னை மற்றும் திருவள்ளூர் செல்லும் வாகனங்கள்,5 கிலோமீட்டர் சுற்றி பட்டாபிராம், தண்டரை வழியாக, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக சென்று வந்தனர். இருசக்கர வாகனங்கள், வழக்கம் போல், அதே கடவு பாதையின் வழியாக சென்று வந்தனர்.
2020-ம் ஆண்டு முடிவுற வேண்டிய அப்பணி, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள் கடந்த 23 ம் தேதி முடிவுற்றது.
வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு அசத்தல்
இதையடுத்து முடிவுற்ற மேம்பாலத்தின் ஒரு பகுதியை கைத்தறி மற்றும் துணி நூல்த்துறை அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மேம்பாலத்தின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (செப் -25) மாலை திறந்து வைத்தனர். இதன்பின் வாகன ஓட்டிகளை கொடியசைத்து இனிப்புகளை வழங்கி வரவேற்று அனுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், நெடுஞ்சாலைத்துறை நபார்டு தலைமைச் செயற்பொறியாளர் தேவராஜ், கோட்ட பொறியாளர் சிவசேனா, திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், ஆவடி மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏக்களான சா.மு.நாசர். ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.