சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி வருகிறது. தினமும் இந்த பால் பண்ணையில் இருந்து தான் மக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலையில் கடந்த பல நாட்களாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பால் பண்ணை சாலையில் ஏற்கனவே கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது அப்பகுதி முழுவதும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதாள சாக்கடையின் மூடியிலிருந்து நீரூற்றுப் போல் கழிவு நீர் கொப்பளித்து வெளியே வந்து கொண்டிருப்பதால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் பிரச்சனை தொடர்பாக மண்டல அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் கழிவுநீர் பிரச்சனை இருந்து வருவதாகவும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.