தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 11.41 ஏக்கரில் மட்டும் டைடல் பார்க் அமைக்க ஒதுக்கப்பட்டது. ரூ. 230 கோடி திட்ட மதிப்பீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் கட்டிடத்திற்கு ப்ளான் செய்யப்பட்டு பணி தொடங்கியது. 2018ம் ஆண்டு மும்முரமாக தொடங்கிய கட்டுமான பணி 2020 – 2021 கொரோனா காலக்கட்டத்தில் சுமார் 2 ஆண்டுகள் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தினால் திட்ட மதிப்பீட்டுத் தொகையும் 330 கோடி ரூபாயாக அதிகரித்தது.
21 மாடிக் கட்டிடத்தில் அதிநவீன ஸ்கைகார்டன், இணைதள மையம் மற்றும் வணிக மையங்கள் உள்ளிட்ட உலகத்தரத்தில் தொழில்நுட்ப பூங்கா தயாராகியுள்ளது. தமிழகத்தின் 3வது மிகப்பெரிய மற்றும் சென்னை வடமேற்கு பகுதியில் உருவாகியுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா ஸ்டார்ட் – அப்கள் மற்றும் IT / ITES நிறுவனங்களின் முகவரியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் டைடல் பார்க் பட்டாபிராம்-ல் பயன்பட்டிற்கு வரவிருப்பது பெருமைக்குரியது. இப்பூங்காவில் 13 வது மாடியில் இருந்து 17 வது மாடி வரையில் நவீன தொங்கும் தோட்டமும், 44 ஆயிரம் சதுர அடியில் ஃபுட்கோர்ட் எனக்கூறப்படும் அதி நவீன 5 ஸ்டார் தர உணவகம் மற்றும் மின்சாரத் தேவைக்காக சோளர் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பார்க் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என காத்துக்கிடந்த ஆவடி தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, இந்த நாள் (நவ.22) அமைந்துள்ளது. இதன் மூலம், திருவள்ளுர் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதி செய்யப்படும் என்று தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.