பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. – ஆவடி மக்கள் அவதி..
தமிழகமே டெங்கு பரவலில் அச்சமடைந்து வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் குடியிருப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
1.5 கோடி மதிப்புள்ள பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளது– சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து தண்ணீரில் மிதக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட நவீன பூங்காக்கள் இருக்கும் நிலையில் அவைகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் உடைந்த உபகரணங்கள் மற்றும் புதர் மண்டி சிதலமடைந்து காட்சியளிக்கின்றது. இதனால் காலை, மாலை நடை பயிற்சி செய்வோர் மற்றும் மாலையில் சிறுவர்கள் பூங்காக்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி 47 வது வார்டு பகுதியில் சுமார் 1.43 கோடியில் பிரத்தியேகமாக நடைபயிற்சி உடற்பயிற்சி விளையாட்டு உபகரணங்கள் கூடிய நவீன பூங்கா மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி வளாகமாக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றுகூட முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது.
புதர் மண்டியதால் அதிக அளவில் பாம்பு நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்தியதை மெல்ல தவிர்த்து வந்த நிலையில் சுற்று சுவர், விளையாட்டு உபகரணங்கள் உட்பட அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்று தளங்களில் உள்ள பூங்காக்களிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் பூங்கா சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
பூங்காக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி பூங்காவை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் ஐஏஎஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தது உண்மைதான். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் உடனடியாக சீர் செய்ய உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார்.