ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் முடங்கியது மூன்றாவது கண்
பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தற்போது பழுதடைந்துள்ளது.சிசிடிவி கேமராக்களை மீண்டும் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
ஆவடி காவல் ஆணையரகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அப்பொழுது சந்திப் ராய் ரத்தோர் முதல் ஆணையராக பொறுப்பேற்றதும் பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர்.தற்போது அனைத்து சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்துள்ளதால் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை புறநகரில் தொடர்ந்து கொலை, கொள்ளை குற்றங்கள் நடந்த வருகிறது. கோவில் உண்டியல்கள் உடைப்பு, வாகன திருட்டு, இல்லங்களில் நகை, பணம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சாட்டுக்கள் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் முன்புபோல் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களிடம் திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைப்பது இல்லை. குற்றவாளிகள் பயமின்றி நடமாடி வருகின்றனர்.இவை அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ப்தியும் ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு பொது இடங்களில் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.இருப்பினும் அவைகள் முறையாக இயங்காததால் பல்வேறு கொலை குற்றங்கள், சாலையிலே ஓட ஓட விரட்டி கொலை, பொது இடங்களில் வாகன விபத்து தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.இதனால் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.இதனால் பொதுமக்கள் காவல் நிலையம் நாடி தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகின்றனர்.
குற்றங்கள் தடுப்பதற்காகவும் குறைப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன இருந்தும் குற்றவாளிகள் காவல் துறை கண்ணில் மண்ணைத் தூவி பறந்து விடுகின்றனர்.காரணம் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படாததாலும் பராமரிப்பு இல்லாததாலும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
நாம் பதிவு செய்த பட்டாபிராம் ரயில் நிலையம் தொடர்ந்து, பட்டாபிராம் மேம்பாலம் வளைவு விபத்து ஏற்படும் பகுதி, பட்டாபிராம் காவல் நிலைய சாலை வளைவு பகுதி அதன் சுற்று பகுதி மற்றும் இந்து கல்லூரி, அண்ணா நகர் பகுதி, ஆவடி பேருந்து நிலையம், ஆவடி அரசு பொது மருத்துவமனை, ஆவடி ரயில் நிலையம், ஆவடி மாநகராட்சி அலுவலகம்,ஆவடி வட்டாட்சியர் அலுவலகம்,ஆவடி செக் போஸ்ட் பகுதி, திருமுல்லைவாயல் பிரதான சாலை, ஆவடி ஆணையரகம் பிரதான சாலை சந்திப்பு,அம்பத்தூர் பிரதான சாலை, அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே, மற்றும் அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் சாலை சந்திப்பு,அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் என விடியோ பதிவு செய்த அனைத்து இடங்களிலுமே கேமராக்கள் தலை சாய்ந்தும், உடைந்தும் மின் ஒயர் இணைப்பு அருந்தும், பல்வேறு இடங்களில் கேமராக்கள் வானத்தை நோக்கி பார்த்தவாறு உள்ளது, இருந்தும் உபயோகமில்லாத நிலை, இவை அனைத்தும் முறையாக செயல்படுகிறதா இல்லையா என்பது காவல்துறைக்கு மட்டுமே தெரியும்.பொதுமக்கள் இதனைக் கண்டு வருத்தம் அடைகின்றனர்.
எனவே ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் தமிழக முதலமைச்சர் குற்றங்களை தடுப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் சாலைகளில் மீண்டும் சிசிடிவி கேமராக்களை முறையாக பொருத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.