அம்பத்தூர் அருகே பங்களாவில் புகுந்து மூதாட்டி வேலைக்கார பெண்ணை மிரட்டி 1.5 லட்சம் பணம் 15 சவரன் நகை கொள்ளை.
சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் பின்புற பகுதியில் உள்ள பி பிளாக் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுசித்ரா (70).அதே பகுதியில் உள்ள மகாலக்ஷ்மி என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டு மூதாட்டியை கவனித்து வருகிறார் .மூதாட்டியின் மகன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மூதாட்டி தனியாய் வசிப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் மூதாட்டியின் பங்களா வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதை பார்த்த மூதாட்டியும் வேலை செய்யும் பெண்ணும் அதிர்ச்சியடைந்து நீங்கள் யார் ? என்று கேட்டுள்ளனர். உடனே மர்ம நபர்கள் அவர்கள் இருவரது கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர் .
பின்னர் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் பணம் மற்றும் நகை எங்கே உள்ளது என்று கேட்டு மிரட்டியுள்ளனர் .மூதாட்டி பதிலளிக்காத நிலையில் பீரோவின் லாக்கரை உடைத்து ஒன்றரை லட்சம் பணம் ,15 சவரன் நகை மற்றும் விலையுயர்ந்த செல்போனையும் கொள்ளை அடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் சொல்லக்கூடாது என்றும்,சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கூறி அங்கு இருந்து தப்பித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து மூதாட்டி தன மகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அழுதுள்ளார் .மூதாட்டியின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்துள்ளனர் .அப்போது மூதாட்டி நடந்ததை கூறி கதறியுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும் மூதாட்டி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .அதனை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீஸ் ரோந்து வராததே திருட்டுக்கு காரணம் என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளனர்.