பாகிஸ்தான் இராணுவம் எந்தப் போரிலும் வெற்றி பெறவில்லை என்றும், 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இன்னும் தங்கள் காவலில் இருப்பதாகவும் பலூச் விடுதலை இராணுவம் கூறியுள்ளது. பலூச் விடுதலை இராணுவம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவம் உண்மையிலேயே பணயக்கைதிகளை விடுவித்திருந்தால், ஏன் அந்த பணயக்கைதிகளின் படங்களை வெளியிடவில்லை என்று சவால் விடுத்துள்ளது.
நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், மக்களும் மீட்கப்பட்டதாகக் கூறியது பாகிஸ்தான் அரசு. பலூச் விடுதலைப் படையின் இந்த அறிக்கைக்குப்பிறகு பாகிஸ்தான் இராணுவத்தின் செயல்பாடு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை ஒரு பணயக்கைதியின் புகைப்படத்தைக் கூட வெளியிடவில்லை. பாகிஸ்தான் இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து நிபுணர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வந்தனர்.
பலூசிஸ்தானின் போலனில் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறானது என்றும், சண்டை தொடர்கிறது என்றும் பலூச் விடுதலை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள், படங்களை பாகிஸ்தான் இராணுவம் இன்னும் பகிரங்கமாகப் பகிரவில்லை. 33 பலூச் போராளிகளின் பெயர்கள், படங்களும் வெளியிடப்படவில்லை. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மறைக்கும் பாகிஸ்தான் இராணுவத்தின் பாரம்பரியம் தொடர்கிறது. சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தான் அரசை கண்மூடித்தனமாக நம்புவதற்குப் பதிலாக விசாரிக்க வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும், 155 பணயக்கைதிகளும் மீட்கப்பட்டதாகவும் கூறியது. 27 பலூச் விடுதலைப் படையினர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது. ஆனால், பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தான் இராணுவம் பொய் சொல்வதாகக் கூறி வருகின்றனர். 154 வீரர்கள் இன்னும் பணயக்கைதிகளாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் காவலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
அப்படியானால் பாகிஸ்தான் இராணுவம் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஜாஃபர் எக்ஸ்பிரஸில் சுமார் 750 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததாக பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரயில் குவெட்டாவிலிருந்து சுமார் 450 பேருடன் புறப்பட்டது. அதே ரயிலில் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களும் பயணம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பல முனைகளில் இன்னும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல்கள் பொய்யானது. பொய் சொல்வது பாகிஸ்தானின் இயல்பு. பாகிஸ்தான் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்படும் பணயக்கைதிகள் உண்மையில் பலூச் விடுதலை ராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்.பாகிஸ்தான் இராணுவத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளுமா? என அந்த அமைப்பு சவால் விடுகிறது.
இராணுவத்தின் வெற்றி உறுதியாக உண்மையாக இருந்தால், உலகம் அதன் சொந்தக் கண்களால் யதார்த்தத்தைக் காணும் வகையில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுதந்திரமான பத்திரிகையாளர்களை வர அனுமதிக்க வேண்டும்” என்று பலூச் விடுதலை படை கூறியுள்ளது.