Homeசெய்திகள்பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா புறக்கணிப்பு: வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்

பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா புறக்கணிப்பு: வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்

-

“பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவை புறக்கணித்து வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்.” என பால் தொழிலாளர்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் ஆளுமை மிக்க முன்னோடியான பேரறிஞர் அண்ணா அவர்களின் (வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம்
அண்ணா வழி பேத்தியும், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஐஎப்எஸ் அதிகாரியுமான மு.பிரித்திகா ராணி, ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராக
உள்ள ஐஏஎஸ் அதிகாரியான சித்தார்த் பழனிச்சாமி ஆகியோரது திருமணம் தடபுடலாக இல்லாமல், அச்சு, காட்சி, சமூக வலைதள ஊடகங்களின் நேரலை அலப்பறை இன்றி, முன்னாள் முதலமைச்சர் இல்ல திருமண விழா என்கிற பந்தாவோ, பரபரப்போ
இல்லாது நேற்றைய (07.11.2024 ) தினம் மதுரையில் மிக எளிமையாக நடந்து முடிந்திருப்பது உள்ளபடியே ஆச்சரியமளிக்கிறது.அறிஞர் அண்ணா

ஏனெனில் “அண்ணா எங்களது உயிர் மூச்சு”, “அண்ணா எங்களது இதய துடிப்பு”, “நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்” என்றெல்லாம் மேடைக்கு மேடை வீர வசனம் பேசி வரும் ஆளுங்கட்சி (திமுக) பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கட் அவுட் படையெடுப்பு இல்லாமலும், மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட மாடல் என தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ்” கொடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மதுரையிலேயே வாசம் செய்யும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராசன் ஆகியோரின் நேரடி விஜயம் இல்லாமலும் பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா நடைபெற்றுள்ளது.

அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பேத்தி திருமண விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணி வேராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பேத்தி திருமணத்தை முன்னின்று நடத்தியிருக்க வேண்டியவர் புறக்கணிப்பு செய்ததை காணும் போது “அறிவாலயத்தின் குடும்பம் இருக்கையில் அண்ணா குடும்பம் எதற்கு..?” என அரசியல் கணக்கு போட்டு விட்டாரோ..? என எண்ணத் தோன்றுகிறது.
மேலும் தங்களின் கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்திருக்கும் தமிழகத்தை ஆண்ட தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கூட பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவை புறக்கணிப்பு செய்ததையும், அண்ணாவின் மடியில் தவழ்ந்தேன்”, “அண்ணாவால் வளர்ந்தேன்” என்றெல்லாம் தங்களுக்கு தாங்களே புகழாரம் சூட்டிக் கொண்டவர்களின் குறைந்தபட்ச வாழ்த்துச் செய்தி கூட இல்லாமலும் திராவிட இயக்கத்தின் முன்னோடியான பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றிருப்பதை காணும் போது திமுக, அதிமுக மட்டுமின்றி அண்ணாவின் கொள்கைகளை கடை பிடிப்பதாக புருடா விட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு உதிரிக் கட்சிகளும் வெறும் கறிவேப்பிலை போலவே பேரறிஞர் அண்ணா அவர்களை அரசியலுக்கு பயன்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அதிலும் அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கட் அவுட் வைக்காததற்கு பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கடும் எதிர்வினையாற்றினர்.

அதே சமயம், மாநாட்டு திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு கட் அவுட் வைக்கவில்லை என்றாலும் கூட அந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திரு விஜய் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களை நினைவு
கூறத் தவறவில்லை. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை அண்ணா நாமத்தை உச்சரிப்பதாக கூறும் திராவிட இயக்க, திராவிட கட்சிகளின் நிர்வாகிகள் முதல், இந்நாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் பெருமக்கள் மட்டுமின்றி எதிரி, உதிரி கட்சித் தலைவர்கள் வரை ஒருவர் கூட பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தாமல் புறக்கணிப்பு செய்ததும், சமூக வலைதளங்களில் கூட வாழ்த்துச் செய்தி பகிர்ந்திட மனமில்லாமல் போனதும், பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா குறித்த செய்திகளை எந்த ஒரு அச்சு, காட்சி ஊடகங்களும் வெளியிடாததும் தமிழக அரசியலில் நடைபெற்ற மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றால் அது மிகையாகாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ