சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி. விமானங்களை இயக்குவதற்கு போதிய விமானிகள் இல்லாதது, விமானங்கள் ரத்துக்கு காரணமா?
சென்னையில் இருந்து இன்று மாலை 6.10 மணிக்கு, கவுகாத்தி செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இரவு 10.40 மணிக்கு, கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இன்று மாலை 5.35 மணிக்கு, பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று இரவு 10.05 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 வருகை விமானங்கள், மொத்தம் 4 விமானங்கள், இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, நிர்வாக காரணங்களால், இந்த 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இது குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று கூறுகின்றனர். ஆனால் பயணிகள் தரப்பில் கூறுகையில், நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாக, ஏற்கனவே பயணத் திட்டத்தை வகுத்து, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருக்கிறோம். ஆனால் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். இதனால் பயணிகள் தங்கள் திட்டமிட்டபடி, பயணம் மேற்கொள்ள முடியாமல், அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைப்போல் நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், உண்மையான காரணம், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாதது தான், விமானங்கள் ரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஆத்திரத்துடன் பயணிகள் கூறுகின்றனர்.