விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதால் அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் 22-ம் தேதி கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக, பலரிடமும் கருத்து கேட்கப்பட்டு கட்சியின் கொள்கைகளை அவர் வகுத்து வருவதாகவும், அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த விஜய், நிறைவாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார். மாநாட்டுக்குன் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு திடலில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நடந்து கொண்டே பேசும் வகையில் 800 அடிக்கு நடைமேடை தயாராகி வருகிறது. 50 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் சேர்கள் போடப்பட்டும், மழை வந்தால் நனையாமல் இருக்க பந்தல்களும் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.
இந்தப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே அந்த இடத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநாட்டுத் திடலைக் காண ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் ரசிகர்களை தவெக நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் ஏமாற்றும் அடையும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் விஜய் ரசிகர்கள். மாநாட்டுக்கு முன்பே திடலை பார்த்து செல்ல ஆசையாக வந்தோம். ஆனால், அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இப்போதே மறுக்கிறவர்கள் மாநாடு நடக்கும்போது, விஜய் அண்ணனை பார்க்க விடுவார்களா என சந்தேகம் வருகிறது. நாங்கள் பார்த்துச் செல்வதால் அவர்களுக்கு என்ன பாதகம் நடந்துவிடப்போகிறது. விஜய் சார், உங்கள் அருகில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். நம்மை பிரிப்பதற்கு அவர்களே காரணமாக இருந்து விடப்போகிறார்கள்’’ என கவலையுடன் திரும்பிச் செல்கின்றனர்.