சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகி நடிகை கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாச்சாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில், நீலாங்கரையில் கவுதமியுடன் இணந்து நிலம் ஒன்றை வாங்கி பின்னர் அதனை இருவரும் பிரித்துக்கொண்ட்தாக கூறியுள்ளார். பின்னர் தனக்கான நிலத்தில் தான் வீடு கட்டியதாகவும் கட்டுமானப் பணிகள் 90% சதவீதம் நிறைவடைந்த நிலையில் தங்களுக்கு எதிராக கவுதமி அளித்த பொய் புகாரில் தாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் முறையாக அனுமதி வாங்கி கட்டுமானப் பணி மேற்கொண்ட நிலையில் அனுமதியை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவுதமி அளித்த புகாரில் மாநகராட்சி தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் தங்களது வீடு இடிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக மனுவில் கூறியிருக்கிறார்.
மாநாகராட்சி தான் தங்களது வீட்டை இடித்ததாக நினைத்து மாநாகராட்சியிடம் விளக்கம் கேட்டபோது தாங்கள் இடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநாகராட்சி விளக்கம் அளித்த்தாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இது குறித்து அருகாமையில் விசாரித்த போது, கவுதமி ஆட்களுடன் வந்து தனது வீட்டை இடித்ததாக அவர்கள் கூறியதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
எனவே வீடு இடிக்கப்பட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கும், மன உளைச்சலுக்கும் இழப்பீடாக இரண்டு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இது குறித்து கவுதமி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!