சென்னையில் இருந்து இன்று மும்பை மற்றும் கொச்சிக்கு புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானங்கள் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணி அளவில் 160 பயணிகள், 8 ஊழியர்கள் என 168 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மும்பை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது விமானி, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். விமானம் வானில் பறக்கத் தொடங்கினால் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 7.45 மணிக்கு விமானம் மும்பை புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 160 பயணிகள் உள்ளிட்ட 168 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதனிடையே, இன்று காலை 6.30 மணிக்கு, சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்டு செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் 84 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 90 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். அவர் அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த விமானம் காலை 7.15 மணி அளவில், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானத்தை பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு விமானி கண்டுபிடித்து, சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், விமானத்திலிருந்த 84 பயணிகள் உட்பட 90 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.