பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி 36. இவரது தாயார் காதூர் நிஷா என்பவர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அவரது மகள் ஜெயலட்சுமி மற்றும் உறவினர் ரேஷ்மா ஆகியோர் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இதில் ரேஷ்மா என்பவர் ஜெயலட்சுமிக்கு டிபன் வாங்கி வருவதற்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ராகம் டிபன் சென்டருக்கு சென்று இட்லி மற்றும் சாம்பார் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர்கள் சாப்பிடும் போது சாம்பாரில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!
உடனடியாக ரேஷ்மா மற்றும் ஜெயலட்சுமி இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் போய் கேட்டுள்ளனர். அப்பொழுது அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்த பெரம்பூர் தில்லைநாயகம் ஆறாவது தெருவை சேர்ந்த மல்லிகா பேகம் 56 அவரது மருமகள் சமீமா 26. மற்றும் ஐந்து வயது சிறுமியான ஆயிஷா பரானா ஆகியோர் அந்த ஓட்டலில் இருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்துள்ளனர்.
சாம்பாரில் பல்லி விழுந்த விஷயத்தை ரேஷ்மா ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதை பார்த்த மூன்று பேரும் வாந்தி எடுத்தனர். உடனடியாக இவர்கள் மூன்று பேரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
மேலும் ஏற்கனவே பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட ஜெயலட்சுமி என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் 60 என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஹோட்டலை நடத்தி வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர் இட்லி சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களை பரிசோதனை செய்து மாதிரி எடுத்துச் சென்றுள்ளார். பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்