பெங்களூரில் இருந்து சென்னைக்கு விநியோகம் செய்வதற்காக 500 கிலோ குட்காவை கடத்திவந்த நபரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை செங்குன்றம் கரிகாலசோழன் 5வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற பாடி கண்ணன் (51). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தார்.
இந்நிலையில் அம்பத்தூர் டி.சி.எஸ் மைதானம் அருகே குட்காவை கைமாற்றுவதற்காக கண்ணன் வந்திருப்பதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்த அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார், குட்காவை விற்பனைக்காக கொண்டுவந்த கண்ணனை, பதுங்கி இருந்து லாவகமாக பிடித்து கைதுசெய்து, அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடமிருந்து 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், எந்தெந்த கடைகளுக்கு குட்கா விநியோகம் செய்தார், யாரிடமிருந்து குட்காவை வாங்கி வருகிறார் போன்ற தகவல்களை போலீசார் சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.