சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து, 77 ஆயிரத்து 697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அன்று 3 லட்சத்து, 74 ஆயிரத்து 87 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதேபோல், ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகளும், மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகளும், ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகளும் பயணித்துள்ளனர். ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 30.99 லட்சம் பயணிகளும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40.73 லட்சம் பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20.90 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.