சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆகஸ்ட் மாதம் 95.45 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மா தத்தில் 86,15,008பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
அதிகபட்சமாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 33,42,595 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 16,026 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,050 பயணிகள், கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 40,97,858 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20,81,096 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.