சென்னையில் ஒரே சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தந்தை மகன் உட்பட ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழப்பு.
சென்னை எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த டேனியல் இவர் விளம்பரங்களை வரையும் ஓவியர் பணியை செய்து வருகிறார். இவர் தனது மனைவி ஸ்டெல்லா ராணி, 7 வயது மகள் ஸ்வீட்டி, 12 வயது மகன் மோசஸ் ஆகிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மணலி விரைவுச்சாலை சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
கண்டெய்னர் லாரியில் மோதிய விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் துடிதுடித்து இருசக்கர வாகனத்தை ஒட்டிய டேனியல் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
பின்னால அமர்ந்திருந்த மகள் மற்றும் மனைவிக்கு பலத்த காயமேற்பட்டு தனியார் மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோன்று மணலி அடுத்து வெள்ளிவாயல் சாவடி சேர்ந்த இளைஞர் வினோத் (23) தனது நண்பர் கிரேன் (23) இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மணலி விரைவுச்சாலை சத்தியமூர்த்தி நகர் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எண்ணூர் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களைக் கண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஹெல்மெட் இல்லாததால் போலீசாருக்கு பயந்து வாகனத்தை வந்த வழியே திருப்பிச் சென்ற போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த வினோத் தலை நசுஙகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த கிரேன் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் இரு சக்கர வாகனத்தில் மணலி விரைவுச்சாலை எம் எஃப் எல் சந்திப்பில் வழியாக சாலையோரம் சென்று கொண்டிருந்த பொழுது மணலி புதுநகரில் இருந்து சென்னை துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் முகமது அலி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் கண்டெய்னர் ஓட்டுனர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே சாலையில் வெவ்வேறு இடங்களில் மூன்று விபத்துக்கள் ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.