சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு வி க நகர், உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் தரை கால்பந்து விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் கால்பந்து விளையாட்டு மைதானத்துக்கு மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் இந்த மாதத்துக்கான கூட்டம் அக்டோபர் 24ல் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இதில் 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது. அதில் வார்டு 37ல் வியாசர்பாடி கால்பந்து திடல், வார்டு 58ல் நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67ல் திரு விக நகர் கால்பந்து மைதானம், வார்டு 77இல் உள்ள கே.பி.பார்க் கால்பந்து மைதானம் உள்ளிட்ட 9 இடங்களை தனியாருக்கு விட சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு கிடைக்கும் எனவும் மைதானத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆண்டுக்கு 2.3 கோடி கிடைக்கும் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரூ.93 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கால்பந்து மைதானத்தை தனியாருக்கு அளிப்பதற்கு எதிராக கால்பந்து வீரர்கள் ரிப்பன் மாளிகை முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். இதனிடையே சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் , சொத்துக்களை பராமரிக்க வருவாய் தேவை என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். SDAT இல் பதிவு செய்த விளையாட்டு வீரர்களுக்கு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
இவ்வாறு கால்பந்து திடல்களை தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.