தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
அதில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அமல்படுத்த பட்டியல் இனப் பிரிவுகளை வகைப்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும், அருந்ததியர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பினர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் தலைவர் அதியமான் தலைமையிலான பேரணியை, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் துவக்கி வைத்தார். சென்னை எழும்பூர் L.G. சாலை சந்திப்பில் தொடங்கிய பேரணியில், அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று சதவீத உள் இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்த மறைந்த முதல்வர் கலைஞரை பாராட்டியும் அதற்கு சட்டப் போராட்டம் நடத்தி அந்த மூன்று சதவீத உள் இட ஒதுக்கீட்டை காப்பாற்றி தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பேரணியில் ஏந்தப்பட்டிருந்தது. முன்னூறுக்கு மேற்பட்டோர் பங்கேற்று இந்த பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே முடிவடைந்தது.
அப்போது பேட்டி அளித்த அதியமான் தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.