- Advertisement -
பள்ளி மாணவர்களுக்கு மாலையில் “ஸ்நாக்ஸ்”! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 2023- 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா அறிவித்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்
- திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்த இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
- ’மக்களைத் தேடி மேயர்’ சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டத்தை அறிவித்தார் மேயர் பிரியா. இதன் மூலம் சென்னையில் உள்ள மக்கள் மேயரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம். அவை உடனுக்குடன் தீர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு மற்றும் சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நொறுக்குத் தீனி வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.
- 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் (ஏப்ரல் மாதம்) வரை மாலையில் சிறுதீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) வழங்கப்படும்.
- சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கற்றல்/கற்பித்தல் செயல்முறைகள் மட்டுமின்றி நமது நாட்டின் பாராளுமன்ற நடைமுறைகளை அறிவதோடு, பிற நாடுகளின் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ளவும், தீர்வுகளைக் கண்டறியவும், பன்னாட்டு கலாச்சாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி நமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு அமைக்கப்படும்.
- அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும்.
- சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி (Manual), மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி (Electronic), ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் Maracas போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
பழுது ஏற்பட்டிருக்கும் பள்ளிக் கட்டடங்களின் மேற்தளங்களை முன்னுரிமையின் அடிப்படையில், Epoxy Water Proofing என்ற தொழில்நுட்பத்தின் மூலம், மறுசீரமைப்பது (Retrofitting of roofs) மற்றும் பள்ளிக் கட்டடங்களின் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளுக்காக 2023-2024 கல்வியாண்டில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.- அரசாணை(நிலை)எண். 48, பள்ளிக் கல்வி (ப.க.5(2)) துறை, நாள்: 01.03.2023-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 90 தொடக்கப்பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 8 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- பெருநகர சென்னைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் Public Address System அமைத்து தரப்படும். முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35 இலட்சம் செலவில் 70 Public Address System அமைத்து தரப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
- அனைத்து சென்னை உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறை வகுப்புகளைச் சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதற்கட்டமாக, 2023-2024-ஆம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் மதிப்பீட்டில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் ரூ.2 கோடி மேம்படுத்தப்படும்.
- ஆசிரியர் தொழில் மேம்பாடு : 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு, இதுவரை ரூ.1,500/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஊக்கத்தொகை ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.