கனமழையால் ஸ்தம்பித்த சென்னை- போக்குவரத்து துண்டிப்பு
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் வாகனங்கள் சிக்கியதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்தனர். இதனையடுத்து கத்திபாரா பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை வியாசர்பாடி ஜீவா சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலை- கிரீன்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகே 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியது. இதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளானர். இதேபோல்
தாம்பரம் மாநகராட்சி சுரங்க பாலங்களில் அதிகாலை 2.30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்துவருகிறது. வெள்ளநீர் ஆங்காங்கே சூழ்ந்துள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.