கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளை உடன் படிக்கும் மாணவியும் வேறு சில ஆண் நண்பர்களும் தவறான முறையில் வழி நடத்துவதாகவும், அவர்களில் ஒரு ஆண் நண்பர் பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்ததாகவும் W6 அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரானது CSR ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கபட்டு வந்தது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர். பாலியல் குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்தவுடன், கடந்த 6ஆம் தேதி அன்று W3 எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7ஆம் அன்று திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (20) என்பவரும் மற்றும் பள்ளி மாணவர் நரேஷ்(19) என்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் LD651 வளர்ச்சி குன்றியவராக இருப்பதால் புலன் விசாரணை செய்வது விசாரணை அதிகாரிக்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில் 4 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இவ்வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.