சென்னையில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை
சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.
சென்னையில் ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, கிரீன், நீலம் என மூன்று வகை பாக்கெட்டுகளில் புழக்கத்தில் விற்பனையில் உள்ளது. இதில் ஆரஞ்சு பால் பாக்கெட் கார்டு வாடிக்கையாளர்களாக இருந்தால் அரை லிட்டர் இருபத்தி நான்கு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆவின் கடையில் வாங்கினால் முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும். மளிகை கடைகளில் முப்பத்திரெண்டு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். பச்சை பால் பாக்கெட் அரை லிட்டர் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.இருபதுக்கு கிடைக்கும். ஆவின் கடையில் ரூ.இருபத்திரெண்டுக்கும், மளிகைக் கடைகளில் ரூ.இருபத்தினான்குக்கும் கிடைக்கிறது.
நீல பாக்கெட் பால் அரை லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.18.50-க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் இருபது ரூபாய்க்கும், மளிகை கடைகளில் ரூ.இருபத்திரெண்டுக்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து மளிகைக் கடைக்காரர் குறிப்பிட்டுள்ளதாவது, பால் பாக்கெட்டுகளை எங்கள் கடைக்கு கொண்டு வருபவர் ஐம்பது பைசா லாபம் வைத்துதான் எங்களிடம் தருவார்.
எங்களுக்கு அடக்க விலையே இருபது ரூபாய் ஐம்பது பைசா ஆகிவிடுகிறது. அதன் மீது நாங்கள் ரூ.1.50 வைத்து இருபத்திரெண்டு ரூபாய்க்கு பால் பாக்கெட்டை விற்கிறோம். ஆனால் சூப்பர் மார்க்கெட்டை பொறுத்த வரை அவர்கள் பில்போடுவதால் எம்.ஆர்.பி. விலை ரூ.இருபதுக்குதான் விற்க வேண்டும். அதைவிட கூடுதலாக இப்போது விற்பதாக தகவல் வந்துள்ளது.
சென்னையில் ஆவின் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு முன்பு வந்து விடும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே காலதாமதமாக கிடைக்கிறது. எனவே தமிழக அரசு பால் வினியோகத்தைக் கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மளிகைக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.