ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்பட்டது. இந்த நிலையில், புயல் கரையைக் கடப்பதில் கால தாமதம் ஏற்படலாம் என்பதால், விமான நிலையம் மூடப்பட்டது நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படுவதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸிகள், ப்ரீபெய்ட் டாக்ஸிகள் இயக்கப்படவில்லை. இதனால் விமான பயணிகளின் வசதிக்காக, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் விமான நிலையத்திற்கு வெளியில் ஜிஎஸ்டி சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும், விமான நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் மாலையிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை சீரடைந்து, வழக்கமான போக்குவரத்து தொடங்கும் வரை இந்த ஏற்பாடு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.