Homeசெய்திகள்சென்னைசரக்கு ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி சேதம் ... கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில்...

சரக்கு ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி சேதம் … கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

-

மீஞ்சூர் அருகே  சரக்குரயிலின் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி உடைந்ததால் கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஆந்திராவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு கொக்கி எதிர்பாராத விதமாக உடைந்தது. இதனால் இஞ்சினுடன் ஒரு பெட்டி மட்டும் கழன்றுசென்ற நிலையில், மற்ற பெட்டிகள் அங்கேயே நின்றன. இதனை அடுத்து, ஓட்டுநர் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் எஞ்சினை நிறுத்திவிட்டு, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் நடுவழியில் கழன்று நின்ற சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 2 பெட்டிகளிலும் உடைந்துள்ள இணைப்பு கொக்கிகளை அகற்றிவிட்டு புதிய கொக்கிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தனியாக கழன்று நின்ற பெட்டிகளை மற்றொரு இன்ஜினை வரவழைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு எடுத்துச்செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

Train

இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் இருந்து வரும் புறநகர் ரயில்கள் மீஞ்சூருடன் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றன.

MUST READ