நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி ராஜினாமா : மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு. நாதக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல் : சீமானே காரணம் என அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளரும் முன்னாள் மக்களவை வேட்பாளருமான மகேந்திரன் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த மகேந்திரன் நாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மண்டல செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த இவர், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 85 ஆயிரத்து 747 வாக்குகள் பெற்று தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்ற நாம் தமிழர் வேட்பாளர் என்ற அடையாளத்தைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு திருபெரும்புதூர் நாடாளுமன்ற மண்டல தலைவர் எனும் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் தற்போது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பதவி விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற திருப்பெரும்புதூர் தொகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை எனவும், தான் வசிக்கும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்கும் அழைக்கவில்லை எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், மேடையில் சமூக நீதி பேசும் சீமான் கட்சியில் அதை கொன்று விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தான் தனது அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.