தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஜவுளிக் கடைகள் நிறைந்த வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளித் திருநாளில் மக்கள் புத்தாடை அணிந்தும், தீபங்கள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் கொண்டாடுவாது வழக்கம். இந்நிலையில் வரும் வியாழக்கிழமை 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் விடுமுறை தினமான இன்று புத்தாடைகள் வாங்க வண்ணாரப்பேட்டை ஜவுளி கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.
துணிக் கடைகளுக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க குவிந்தனர்.
துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜவுளிகள் எடுக்க வண்ணாரப்பேட்டைக்கு வந்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் ஜவுளிகள் மட்டுமல்லாமல் அணிகலன்களும் நகைக்கடைகளும் அலங்காரப் பொருட்களும் உள்ள நிலையில் ஏராளமானோர் ஒரே இடத்தில் புத்தாடைகளையும், நகைகளையும், அணிகலன்களையும் வாங்கி செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் அணிவகுத்து வருவதாக கூறப்படுகிறது.
மக்களே உஷார்… தீபாவளிக்கு இங்கே ஷாப்பிங் செய்து ஏமாறாதீர்கள்..!