மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் Clerk வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை பெற்று மோசடி.
போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த கணவன்-மனைவி கைது.
மனுதாரர் திரு.விஸ்வநாதன், ஸ்ரீநிவாசன் மற்றும் தினேஷ் ஆகிய நபர்களிடம் குடும்ப நண்பராக பழகிய சென்னையைச் சேர்ந்த நந்தகோபாலன் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஆகியோர் தங்களுக்கு தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது என்று கூறி அதன் மூலம் தமிழ்நாடு மத்திய, மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சல் துறையில் Clerk வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில் எதிரிகள் சென்னையைச் சேர்ந்த நந்தகோபாலன் மற்றும் அவருடைய மனைவி திவ்யா மேற்கண்ட 3 நபர்களிடம் மத்திய, மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/-பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டது உண்மை என விசாரணையில் தெரியவருகிறது.
மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவினர் தலைமறைவாக இருந்த எதிரிகளை தேடிவந்த நிலையில் 30.01.2025-ம் தேதி மேற்படி வழக்கின் எதிரிகள் நந்தகோபாலன், வ/40, த/பெ.சுந்தரேசன், தணிகாச்சலம் நகர் 1வது மெயின் ரோடு, பொன்னியம்மன்மேடு, சென்னை மற்றும் அவரது மனைவி திவ்யா, வ/35, க/பெ.நந்தகோபாலன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இது போன்று பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.