அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக வந்த விளம்பரம் மூலம் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன் (44) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
அவர், எஸ்.எஸ்.என்.எல் ஸ்மார்ட் அக்கவுன்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் பேங்க் ஸ்டேட்மென்ட், ஐடி ரிட்டன்ஸ், சிபில் ஸ்கோர் இல்லாமல் ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை 1.50 பைசா வட்டியில் லோன் வாங்கித் தருவதாகவும் தேவியிடம் கூறியுள்ளார். மேலும் வாவ் புட் மேக்கர் என்ற மற்றொரு நிறுவனத்தையும் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு 5 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன் பேரில் எஸ்.எஸ்.என்.எல் ஸ்மார்ட் அக்கவுன்ட் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் லோனுக்கான முன்பணம் ரூ.2 ஆயிரம், வாவ் புட் மேக்கர் நிறுவனத்தில் ஷேர் தருவதாக கூறி ரூ.5,00,000 என மொத்தம் ரூ.5.25 லட்சத்தை தேவியிடம் செபாஸ்டியன் பெற்றுக் கொண்டுள்ளார். இதேபோல் 70 பேரிடம் லோன் மற்றும் 5 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி மொத்தம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பெற்றுக்கொண்டு, திருப்பித் தராமல் செபாஸ்டியன் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார்.
அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பெருமாள், கூடுதல் காவல் துணை ஆணையர் ஸ்டீபன் மற்றும் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தூத்துக்குடியில் பதுங்கி இருந்த செபாஸ்டியனை நேற்று கைது செய்த தனிப்படை போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.