பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னையில் பாமக மாவட்ட செயலாளர் வண்ணாரப்பேட்டை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வட சென்னை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா. இவரது மகன் நிஷால் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு நிஷால் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்த போது அவரை ஐந்துக்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நிஷால் தப்பி சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, மீண்டும் மர்ம நபர்கள் சோலையப்பன் தெருவில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை அடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சத்யா பெட்ரோல் வெடி குண்டு வீச்சு தொடர்பாக புகார் அளித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது அப்பகுதியை சார்ந்த இளைஞர்களுடன் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தற்பொழுது பகை தீர்த்துக்கொள்ள நிஷாலை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
நிஷால் தப்பி ஓடிய நிலையில், அவரது இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.