டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு.
2025 ஆம் ஆண்டு நிறைய செஸ் தொடர்கள் உள்ளது. அந்த போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் இருந்து நான் சரியாக விளையாடவில்லை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே வெற்றி பெற்றது சந்தோஷமாக இருக்கிறது என்று கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி.
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தாயகம் திரும்பினார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, இந்த போட்டியில் வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. நிறைய உலக சாம்பியன்கள் இந்த போட்டியை விளையாடியுள்ளனர், அதில் வெற்றி பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பாதியில் இருந்து நான் சரியாக விளையாடவில்லை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே வெற்றி பெற்றது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் போட்டிக்காக நான் நிறைய பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். 2025 ஆம் ஆண்டு நிறைய செஸ் தொடர்கள் உள்ளது. அந்த போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இந்த வெற்றி மிக முக்கியமானது கடந்த கால போட்டிகளில் நான் சந்தோஷமாக இல்லை தற்போது மகிழச்சியாக உள்ளது.
கடைசி சுற்று கொஞ்சும் டென்ஷன் ஆக இருந்தது, இரண்டு பேரும் இரண்டு வலிமையான வீரர்களுடன் விளையாடி கொண்டு இருந்தோம். நானும் குக்கேஷும் முதலில் ட்ரபுலில் மாட்டிக் கொண்டோம் பிறகு விளையாடிய சுற்றுகள் நன்றாக இருந்தது கடைசியில் வெற்றி பெற்று விட்டேன்.
இரண்டு தமிழ்நாடு வீரர்கள் தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது அதில் எப்படி இருந்தாலும் வெற்றி தமிழ்நாட்டிற்கு தான் வந்திருக்கும் போட்டிக்கு முன்பு அதைப்பற்றி எல்லாம் யோசிக்க முடியாது என்றார். இறுதியாக பேசிய பிரக்ஞானந்தா தாய் நாகஜோதி, கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தொடக்கம் நன்றாக அமைந்துள்ளது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது குகேஷ் மற்றும் என் மகன் இருவரில் யார் வெற்றி பெற்று இருந்தாலும் சந்தோஷமாக தான் இருந்து இருக்கும் என்றார்.