சென்னையில் 1000 சதுர அடிகளுக்கு மேல்உள்ள கடைகள் மளிகை பொருட்கள் விற்கத் தொடங்கியபின், பாரம்பரியமாக அண்ணாச்சி மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் மூடப்பட்டுவிட்டன என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மாநகராட்சி வர்த்தக கூட்டமைப்புகளுடன் பேச்சு நடத்தி, அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களையும், வாழ்வாதாத்தை பாதுகாக்கும் வசதிகளையும் செய்துதர பேசி வருகிறது.
வர்த்தக லைசன்ஸ் வழங்குவதில் ஏற்கெனவே விதிகளைத் தளர்த்தியுள்ளது சென்னை மாநகராட்சி. இருப்பினும் 500 சதுர அடிகளுக்கும் குறைவான மளிகைக் கடைக்கான லைசென்ஸ் வாங்குவது குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 10,645 ஆக இருந்த சில்லறை மளிகைக்கடைகள் இன்று 8476 ஆகக் குறைந்துவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் சிறுமளிகைக்கடைகள், அதாவது 2,169 மளிகைக் கடைகள் சென்னையில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக ராயபுரம் மண்டலத்திலும், ஜார்ஜ்டவுன் பகுதியையும் அடக்கி இருந்த மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடந் 5 ஆண்டுகளில் மட்டும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1342 மளிகைக்கடைகளில் 286 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் குறிப்பாக தி நகரில் 645 மளிகைக் கடைகளில் 199 கடைகள் மூடப்பட்டுள்ளன.தேனாம்பேட்டை மண்டலத்தில் 695 கடைகளில் 207 கடைகள் மூப்பட்டன. அண்ணா நகர் பகுதியில் 634 மளிகைக் கடைகள் செயல்பட் நிலையில் 183 கடைகள் மூடப்பட்டன. அடையார் பகுதியில் 537 கடைகளில் 171 கடைகள் மூடப்பட்டன.
சென்னையில் 15 மண்டலங்களில் சராசரியாக 20 சதவீத சிறுமளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் இருந்த மளிகைக் கடைகளில் 34 சதவீதம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டதிலிருந்து சென்னை மாநகரட்சி, சென்னையில் மளிகைக் கடைகளின் எண்ணிக்கை, லைசென்ஸ் வழங்குவதை கண்காணித்துவந்தது. சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரங்கள்படி, 15 மண்டலங்களில் அங்கீகாரம் பெற்ற சூப்பர் மார்க்கெட்டுகள் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 577 லில் இருந்து 388 ஆக்குறைந்துள்ளன.
2025, மார்ச் 5ம்தேதி நிலவரப்படி அண்ணா நகரில்தான் அதிகபட்சமாக சூப்பர்மார்க்கெட்டுக்கு லைசென்சு தரப்பட்டநிலையில், தற்போது 67 லைசென்சுகளைக் கொண்ட கடைகள் மட்டும்தான் இயங்கி வருகின்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 95 பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 27 கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா நகர் பகுதியில் மூடப்பட்டுவிட்டன. கோடம்பாக்கம் பகுதியில் 89 பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் 23 கடைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னை வர்த்தக மாவட்டத்தின் வர்த்தகப் பிரதிநிதி எஸ். நாகபூஷனம் கூறுகையில் “ சென்னையில் இன்று நடக்கும் 70 சதவீத மளிகைக் கடைகள் லாபத்தில் இயங்கவில்லை, 30 சதவீத கடைகள்தான் கடந்த 3 ஆண்டுகளில் லாபத்தை ஈட்டுகின்றன. சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அதிகரித்துவிட்டன. வாடகை அதிகரித்துவிட்டது. வர்த்தக லைசென்சுக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி அதிகாரிகளிடம் வர்த்தகர்கள் தரப்பில் பேசப்பட்டது. தொழில்வரி, சொத்துவரி ஆகியவற்றைக் குறைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த பேசப்பட்டது.
மக்களிடம் செலவு செய்ய போதுமான பணம் இல்லை குறிப்பாக மளிகைப் பொருட்களை வாங்க பணம் இல்லை. சில குடும்பங்கள் ஆன்லைனில் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள், ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்கி செலவைக் குறைக்கிறார்கள்.
வர்த்தகத் தளங்கள் ஆன்லைனில் வந்தது, போட்டி காரணமாக விலைக் குறைப்பு செய்தது ஆகியவை பாரம்பரியமாக மளிகைக் கடைகள் நடத்துவோருக்கு அதிக அழுத்தத்தை தந்தன. ரியல்எஸ்டேட் விலையும் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி கடையை மூட நேரிடுகிறது” எனத் தெரிவித்தார்.
தி நகரில் மணி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தார். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெருக்கத்தால் தனது பாரம்பரிய மளிகைக் கடையை மூடிவிட்டார். கேன் வாட்டருக்காக மட்டும் மக்கள் அழைக்கிறார்கள், மற்றவகையில் ஆன்லைன் நிறுவனங்கள்தான் வேகமாக பொருட்களை டெலிவரி செய்வதாக மக்கள் நம்புகிறார்கள் என்று மணி தெரிவித்தார்.
சிறு மளிகைக் கடை நடத்திவரும் மனோஜ் என்பவர் கூறுகையில் “ கடந்த 9 மாதங்களாக என்னுடைய வர்த்தகம் நஷ்டத்தில் செல்கிறது, என்னால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்கமுடியாது. என்னிடம் தாக்குப்பிடிக்க சொத்து அல்லது பணமும் இல்லை. பெரிய நிறுவனங்களோடு போட்டியிடவும் முடியாது. ரியல்எஸ்டேட், வாடகை கட்டணம் உயர்ந்தது சிரமத்தை மேலும் அதிகரித்தது. ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் வந்தபின் தங்கள் வியாபாரம் 30 முதல் 40 சதவீதம் குறைந்துவிட்டதாக சென்னை மளிகைக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். யாரும் வீட்டைவிட்டு வந்து எதையும் வாங்கத் தயாராக இல்லை. காய்கறிகள், பால் ஆகியவற்றைக்கூட ஆன்லைனில் மக்கள் வாங்குகிறார்கள்.