தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு என்பவரின் வீட்டு செப்டிக் டேங்க் – கை சுத்தம் செய்யும் பணியின் போது, முனுசாமி என்ற மாநகராட்சி ஊழியர் விஷ வாயு தாக்கி பலியானார்.
முனுசாமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி சென்னை மாநகராட்சி 3வது மண்டல அதிகாரி யோகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து, யோகேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்திற்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக கொடுத்ததாகவும், தங்கள் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப் படாததால் தான் செப்டிக் டேங்க் கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது என்பதால், மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில் தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளதால், அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.