அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…
சென்னை புறநகர் பகுதியில் ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறை வாக்கம் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா பேஷன் பிரைவேட் ஏற்றுமதி தொழிற்சாலை 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது.அங்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரிந்த பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை,என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு பணிபுரிந்த பெண்கள் கடந்த மூன்று நாட்களாக இந்த தொழிற்சாலையில் வருங்கால வைப்பு நிதி, மாதந்திர வருகை பதிவேடு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்றும், வருடாந்திர ஊக்கத்தொகை மூன்றாண்டுகளாக வழங்கவில்லை என்றும், போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த தொழிற்சாலை நிர்வாகம் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி அடைந்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..