திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி நேற்று (19/08/2024) சென்னை கொரட்டூரில் உள்ள மோகன் கார்டன் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகச் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு கலந்துக்கொண்டார். திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் டாக்டர்.யாழினி போட்டியைத் தொகுத்து வழங்கினார்.
வினாடி வினா போட்டி, 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மண்டலத்தில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
தமிழ் மொழி, இலக்கியம், திராவிட வரலாறு, கலைஞர் ஆற்றிய பணிகள், திமுக அரசின் திட்டங்கள் குறித்து வினாடி வினா கேள்விகளுக்கு ஆர்வத்துடன் போட்டியாளர்கள் பதில் அளித்தனர்.
விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது, ”இந்த கலைஞர்100 வினாடி வினா நிகழ்ச்சி ஒரு முக்கியமான காரணத்திற்காகத்தான் நாங்கள் நடத்துகிறோம். ஒரு கட்டுரைப் போட்டி என்றால் வீட்டில் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்துவிட முடியும். அதே போல மற்ற போட்டிகளும், அந்த போட்டிக்கான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தால் போதும். ஆனால், வினாடி வினா போட்டி என்றால் என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாது. அதற்காக நீங்கள் நிறைய விஷயங்களைப் படித்துக்கொண்டு வரவேண்டும், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஏன் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைக்கு எல்லோரும் பள்ளிக்குச் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் படிக்கக் கூடிய பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் நிறையத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், இந்த நிலையை அடைவதற்கு என்னென்ன தியாகங்ககளை செய்திருக்கிறோம், நம் வரலாறு எப்படிப்பட்டது எனத் தெரிந்தால் தான், நாம் எதிர்காலத்தில் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
எப்படிக் கஷ்டப்பட்டு, எவ்வளவு விலை கொடுத்துப் படிக்கக் கூடிய உரிமையைப் பெற்று இருக்கிறோம் என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால், இந்த உரிமைகளை யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது என்று பேசினார்.
இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், திமுக மகளிர் அணி பிரச்சாரக் குழுச் செயலாளர் ராணி ரவிச்சந்திரன்,மற்றும் மாவட்ட மகளிர் அணி, மாவட்ட தொண்டர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ – மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வினாடி வினா போட்டியை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது X தளத்தின் வாயிலாகத் தொடங்கி வைத்தார். ‘kalaingar100.co.in’ என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று (கடந்த ஆண்டு) இணையவழி போட்டிகள் தொடங்கியது. முதல் சுற்று இணையவழி வினாடி வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெற்றது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி மற்றும் 18 வயதிற்குப்பட்டோருக்கான போட்டிகள் என இரு பிரிவுகளாக நடைபெறும்.
இரண்டாவது சுற்று மண்டல போட்டி 12 மாவட்டத்தில் நடைபெறுகிறது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தர்மபுரி, ராணிப்பேட்டை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி முடிவடைந்தது. மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
மேலும் இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குத் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குவார்.