சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொதுமக்கள் வேதனை
சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படுகின்ற காரணத்தால் ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் காவல் துறையை சேர்ந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அவர்களை யாரும் எதுவும் கேட்க முடியவில்லை. மேலும், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் சாலையில் இருபுறமும் வாகனத்தை காலையில் நிறுத்திவிட்டு மாலையில் எடுத்து செல்கிறார்கள். இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், சிலர் வீட்டின் வாசலில் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் வரமுடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கி வாகன நிறுத்த இடம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாலைகளில் நிறுத்தும் வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாகவும், அதைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
அதேபோன்று ஆவடி ரயில் நிலையம், இந்து கல்லூரி ரயில் நிலையம், பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு அருகே இருந்த வாகன நிறுத்தத்திற்கான டெண்டர் தொகை கூடுதலாக இருப்பதால் ஒப்பந்தம் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில் வேலைக்கு செல்பவர்கள் அதே இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அதனால், தினமும் ஏராளமான வாகனங்கள் திருடு போகிறது என்று வாகன உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, ரயில் நிலையங்கள் அருகே உள்ள இரு சக்கர வாகன நிறுத்தங்களை மீண்டும் புதுப்பித்து தருமாறு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.