சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
இந்த விவகாரத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பி்ல் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கை சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, எல்.முருகன் மனுவைத் தள்ளுபடி செய்தும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மூன்று மாதத்தில் முடிக்கவும் கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திமுகவினர் அரசியலுக்காக தன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர் தன்னுடைய பேச்சு முரசொலி அறக்கட்டளையின் அலுவலக அமைந்துள்ள இடம் பற்றியது என கூறியுள்ளனர். மேலும் பேச்சின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டு முரசொலி இந்த அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளது” என வாதிட்டார்.
அதன் பின்னர் எல்.முருகன் பேச்சு குறித்த translation செய்யப்பட்ட பகுதியை வழக்கறிஞர் வாசித்த நிலையில், இதன் அர்த்தங்கள் மாறாமல் குறிப்பிடப் பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க முரசொலி அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் சென்னை எம்பி./எம்.எல்.எக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ருத்ர தாண்டவம் ஆடும் அல்லு அர்ஜுன்….. ‘புஷ்பா 2’ படத்தின் திரை விமர்சனம்!