சென்னை தேனாம்பேட்டையில் லட்சக்கணக்கில் உள்ள மின் கட்டண பாக்கியை செலுத்தக் கூறியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (43) ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. தன் வீட்டில் மேலே கட்டப்பட்டுள்ள இரண்டு மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். கொரானா காலக்கட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்ததால் மின் கட்டண தொகை ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வந்துள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் பலமுறை காலக்கெடு கொடுத்தும் ரூபாய் 2 லட்சத்து பத்தாயிரம் பணம் செலுத்தாமல் இருந்து வந்ததால், ஒரு வாரத்திற்கு முன்பு விஜயகுமார் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் திருட்டுத்தனமாக மின்சார வயர் எழுத்து மின்சாரத்தை பயன்படுத்தியதால் மின்வாரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனால் விஜயகுமார் பலமுறை நண்பர்கள் உறவினர்களிடம் பணம் கேட்டு வந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது விஜயகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பல வருட மின்சார கட்டண பாக்கியை கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு எர்படுத்தியுள்ளது.