சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர் (வயது 19), தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்றிரவு சைதர் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் தாம்பரத்தில் இருந்து ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்றபோது சைதர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்களின் மீது சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (வயது 44) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்த மிசாப் ஹைதர் மற்றும் அவரது 2 நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.