மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டும் எஞ்சியுள்ள திட்டங்கள் குறித்தும் அதேபோல, அடுத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் உடனான சந்திப்பும் நடத்தப்பட்டது. இதில் பேட்டியளித்த அமைச்சர்
மா.சு.,திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய 1271 ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கும் ஆணைகள், வரும் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய எஞ்சிய 954 செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்ற ஆணை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
இந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு எஞ்சியுள்ள 300 செவிலியர்களுக்கான பணியிடங்களை, மருத்துவத் தேர்வு வாரியம் மூலம்
பணியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சு. உறுதியளித்திருக்கிறார்.
இதன் மூலம் செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நூறு சதவீதம் இல்லாத நிலை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2553 மருத்துவ பணியிடங்களுக்கு வருகின்ற ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் 2553 பணியிடங்களுக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கினார்.
இத்தகைய நடவடிக்கை நிலையில், பெரிய அளவில் மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றும் அவற்றை மாநகராட்சித் துறை நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவதுறையை பொருத்தவரை, ஒரு காலிப்பணியிடம் கூட இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் – இஸ்ரோ இணைந்து புதிய ஆராய்சி மையம் தொடங்க திட்டம்