அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5) கரையை கடந்த மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு 73செ.மீ மழை பதிவாகியுள்ளது. டிசம்பர் 4ம் தேதி நள்ளிரவிலேயே சென்னையை கடந்து ஆந்திர மாநிலம் நோக்கி புயல் செல்லத்தொடங்கியது. பின்னர் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டிணம் இடையே கரையைக் கடந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 முதலே மழை முழுவதுமாக குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் மிக்ஜாம் புயல் காரணமாக இன்றும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
வேளச்சேரி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பள்ளிக்கரனை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அத்துடன் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், மின்சாரம் , தொலைதொடர்பு சேவை போன்றவை இல்லாமலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். சென்னை மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வளர்கள் இணைந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 2 நாட்களாக மழையின்றி, வெயில் அடித்து வரும் சூழலில் வெள்ளம் வடியாமல் இருந்து வருகிறது.
இதனால் இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.