நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்
நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருப்பதாக திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி ஆகியவை கூட்டறிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து – அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.
தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது. இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் – இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது.
கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் – விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.