தக்காளியை தொடர்ந்து வெங்காயம் கிலோ ரூ.150 ஆக உயர்வு
கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளியை தொடந்து சாம்பார் வெங்காயம், பீன்ஸ் விலையும் உயர்ந்தது. சாம்பார் வெங்காயம் ஒரே நாளில் 50 ரூபாய் அதிகரித்து கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மொத்த சந்தையில் கடந்த பத்து நாட்களாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சாம்பார் வெங்காயம் விலையும் கணிசாமாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 50 ரூபாய் உயர்ந்து கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி விலையும் உயர்ந்து கிலோ 300 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும், பாகற்காய் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி உணவுக்கு பயன்படுத்தும் காய்கறி வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தங்களை பாதித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக உணவுத் துறை சார்பில் பண்ணை பசுமை விற்பனையகத்தில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ந்து சென்னையில் உள்ள 82 நியாய விலைக் கடைகளிலும் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.