சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னையில் உள்ள 15 சுரங்கப்பாதைகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவானது. ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம், அடையாறு, தரமணி, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் காட்சியளித்தது.
இந்தப்பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமைச்சர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், மண்டலக்குழு தலைவர்கள் இரவில் களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதின் பேரில் மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அத்துடன் மழை விட்ட சில மணி நேரங்களில் தண்ணீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து சீரானது.
இருப்பினும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும், காலை வரை வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.