மகளிர் உரிமைத் தொகை- சென்னையில் 24ல் விண்ணப்பம்: ராதாகிருஷ்ணன்
கூட்ட நெரிசலை தடுக்கவே மகளிர் உரிமைத் தொகை பெற டோக்கன் விநியோகிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் வரும் 24 ஆம் தேதி முதல் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தடுக்கவே டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரே நாளில் டோக்கன் வாங்க மக்கள் வரவேண்டாம், அடுத்தடுத்து இடங்களில் முகாம்கள் நடக்கும். ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை இதற்காக செயல்பட இருக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை வரும் 17ஆம் தேதி முதல் செயல்படும். தகுதி உடைய பெண்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப தலைவிகளுக்கு உதவ ஒரு அலுவலர் இருப்பார். மொத்தம் 1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உரிமைத் தொகை பெற வங்கிக்கணக்கு இல்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.