புதுப்பொலிவு பெறும் மெரினா நீச்சல் குளம் , ஒரு வாரத்தில் திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மெரினா நீச்சல் குளம் இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்
சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கூடுதல் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்
அண்மையில் மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெரினா நீச்சல் குளத்தை பார்வையிட்டுள்ளார். அதை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் துரித படுத்தப்பட்டுள்ளது.
இப்பணியை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியது, மெரினா நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் குளம் அதனைச் சுற்றிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், புதிதாக கண்கவர் ஓவியங்கள் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், கூடுதல் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, நீச்சல் குளநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள், பயனாளர்களுக்குத் தேவையான இதர வசதிகளை ஏற்படுத்தும் பணிகள், சிசிடிவி கேமராக்களை நிறுவுவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, இன்னும் ஒரு வாரத்தில் நீச்சல் குளம் பயன்பாட்டுக்கு வரும். மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக இயக்கி, பராமரிக்கும் என கூறினார்.