டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆவடி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியீடு
பருவநிலை மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் ஆவடி மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சியில் 1,2,3 மற்றும் 4 மண்டலங்களில் 48 வார்டுகள் உள்ளன. அதில் 119328 குடியிருப்புகள் மற்றும் சென்னைக்கு அருகில் 5 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை காலங்களை முன்னிட்டு, டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழல் உள்ளதால், டெங்கு கொசு ,புழுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளர்வதால், பொதுமக்கள் தங்களது குடியிருப்பில் பூ தொட்டியில் உள்ள தண்ணீரையும், வீட்டில் உள்ள குளிரூட்டியின் பின்புறம் உள்ள தண்ணீரையும் தினந்தோறும் அகற்ற வேண்டும். சிமெண்ட் தொட்டி, மேல் நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டிகளை மூடி வைக்கவும், டயர் போன்ற தண்ணீர் நிற்க கூடிய தேவையற்ற பொருட்களையும் அகற்ற வேண்டும்.
தண்ணீர் பிடித்து வைக்கும் கலங்களை முறையாக மூடி வைக்க வேண்டும். தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.அதேபோல், மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணிக்கு வரும்போது அவர்களின் அறிவுரைகளை கேட்க வேண்டும். காய்ச்சல் எதும் வந்தால் மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தண்ணீரை சூடு செய்து பருக வேண்டும். நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். காய்ச்சல் கண்டவர்கள் உடனே சுய மருத்துவம் பார்க்காமல் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.