ரோகிணி தியேட்டரில் தீண்டாமை கொடுமை
சென்னை ரோகிணி திரையரங்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை டிக்கெட் எடுத்தும் படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு நடிப்பில் இன்று வெளியான பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவரை உள்ளே விட மறுத்த ரோகிணி திரையரங்க ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரோகிணி திரையரங்கம், பத்து தல படம் U/A சென்சார் பெற்றது என்பதால் 4 சிறார்களுடன் வந்த அவர்களை அனுமதிக்கவில்லை, 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்த படத்திற்கு அனுமதிக்க முடியாது என்கிற அடிப்படையில் மட்டுமே அந்த குடும்பத்தை அனுமதிக்கவில்லை எனவும், அந்த குடும்பத்துடன் நான்கு சிறுவர்கள் வந்திருந்ததால் அவர்களை அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதற்கு U/A சென்சார் என்றால் படத்தை பெற்றோர் உடன் சிறார்கள் பார்க்க அனுமதி என்றே அர்த்தம் என ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
பட்டியல் சமூகத்தவர்களை அனுமதிக்காத ரோஹினி தியேட்டர் உரிமையாளர் பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் ஆவார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து கோயம்பேடு போலீசார் ரோகினி தியேட்டர் நிர்வாகிகள் இடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுமதிக்கப்படாத நரிக்குறவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.