ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ப்ரோக்கர்களின் கட்டுப்பாட்டில் தான் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழக ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் ஊழல்கள் குறித்து உரிமைக்குரல் என்கிற ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜாகிர் ஹுசைன் கூறியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைத்தவர்களில் ஆட்டோ, கால் டாக்ஸி சங்கத்தினர்களும் ஒருவர்கள் என்று கூறிய அவர் இதுவரை பல்வேறு மனுக்களை நாங்கள் அமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும், 2 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் நாங்கள் அளித்த கோரிக்கையின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், பேசிய அவர் போக்குவரத்து துறையின் கீழ் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் வாகனத்திற்கு எப்.சி போட 5000 இல்லாமல் போட முடியாது என்று கூறிய அவர் வாகனங்களுக்கு எப்.சி பெறுவது வாகனங்களுக்கு பர்மிட் புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய எந்த ஒரு பணிகளுக்கும் ஆர்.டி.ஓ அலுவலகத்தை நாடினால் அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் பணிகளை செய்து கொடுப்பதில்லை என்றும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அதிகாரிகளை அணுகும் அனைவரும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றார்.
ஒரு ஆட்டோவிற்கு பர்மிட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றால் கட்டணம் 450 செலுத்தி அதன் உரிமையாளர் நேரடியாக அதிகாரிகளை அணுகினால் பரமேட்டில் ஏற்கனவே உள்ள அதே முகவரியில் ஆதார் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் மற்றும் தங்கள் இருப்பிடத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்வார் என்கிற பல காரணங்களை கூறி பயமுறுத்துவதாகவும், ஏதேனும் குறையை சொல்வதாகவும் கூறிய அவர் இதுவே ஒரு புரோக்கர்கள் வாயிலாக ஆட்டோவிற்கு பர்மிட் புதுப்பிக்கும் விண்ணப்பம் சென்றால் அரசு கட்டணம் 450 மற்றும் 2000 லஞ்சம் என்று 2,450 வசூலிக்கப்பட்டு எந்த கேள்விகளும் இல்லாமல் இரண்டே தினங்களில் பர்மிட் புதுப்பித்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பணிபுரியும் ஆர்.டி.ஓ.வை பொதுமக்கள் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது என்றும் ஆனால் அவர்களை புரோக்கர்கள் மிகவும் எளிமையாக பார்த்து விடுவார்கள் என்றும் கடந்த காலங்களில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இது போன்ற நிலை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தான் இது அதிகரித்து உள்ளதாகவும் கூறிய அவர் இன்றளவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறையில் பணிபுரியும் அனைவரிடமும் பணி மாறுதல் அல்லது பதவி உயர்வுகள் உட்பட அனைத்திற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது என்று பகிரங்கமாக கூறினார்.
ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இருந்து மேல் இடத்திற்கு ஒரு நாளைக்கு மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் தினமும் லஞ்சம் வாங்குவதாகவும் இது அலுவலகத்திற்கு ஏற்ப மாறும் என்று குற்றம் சாட்டினார். மேலிடங்களுக்கு கட்டாயம் கப்பம் கட்ட வேண்டும் என்ற வசூல் வேட்டை நடப்பதால் போக்குவரத்து துறையில் இன்றளவும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும் கப்பம் கட்டும் முறைக்கு மறுக்கும் நேர்மையான அதிகாரிகள் செயல் ஆக்கப் பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புரோக்கர்கள் தான் எல்லாம் என்ற நிலை உள்ளதாகவும் வரம்பு மீறிய லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும், 99 சதவீதம் பேர் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புரோக்கர் தான் உள்ளதாகவும், ப்ரோக்கர்களின் கட்டுப்பாட்டில் தான் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் உள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் ஓலா உபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது ஓட்டுனர்களிடமிருந்தும் பொது மக்களிடம் இருந்தும் போக்குவரத்து துறை ஆணையருக்கு பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டும் இந்த நிறுவனங்களை முறைப்படுத்தி கால் டாக்ஸி களுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் ola, உபர், ரேப்பிடோ நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பேட்ச் இல்லாமல் ஆட்டோ, கால் டாக்ஸிகளை ஓட்ட ஓட்டுநர்களை நியமிக்கிறது. இதற்காக ஓலா, உபர் நிறுவனங்களுக்கு போக்குவரத்து துறை அபராதம் விதித்ததும் கிடையாது என்றும் ஆனால் சாதாரண டாக்ஸி டிரைவர்கள் இடம் பேட்ச் இல்லாமல் இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழகத்தில் முற்றிலுமாக பைக் டேக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த அவர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு பயப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது போக்குவரத்து துறையின் மெத்தன போக்கை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து 2,000 ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் சரக்கு வாகனங்களுடன் 2000 பேருடன் கோட்டையை நோக்கி மாபெரும் வாகன முற்றுகை பேரணியை நடத்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.