சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது.
கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமான சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவல்லிக்கேணியில் உள்ளிட்ட இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.